×

கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை

*நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிக்கிய கும்பல்

*விற்றவர்களும், வாங்கியவர்களும் கம்பி எண்ணுக்கின்றனர்

திருப்பூர் : கஞ்சா என கூறி மாட்டு சாணத்தை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையை சேர்ந்த லோகநாதன், உமா மகேஸ்வரன் ஆகியோர் திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்த ராகுல் என்பவரை கடந்த 1ம் தேதி இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது, அவர்கள் சில்லறை விற்பனை செய்ய 1 கிலோ கஞ்சா தேவைப்படுவதாக கேட்டனர். இதனைத்தொடர்ந்து பூச்சக்காடு பகுதியை சேர்ந்த கவின், சாரதி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசுமாறு கூறிய ராகுல் அவர்களுடைய தொலைபேசி எண்ணை பகிர்ந்துள்ளார். இதையடுத்து லோகநாதன், உமா மகேஸ்வரன் ஆகியோர் கவின், சாரதி ஆகியோருக்கு தொடர்பு கொண்டு ராகுல் கூறியதாக சொல்லி கஞ்சா கேட்டுள்ளனர்.

அதன்படி கவின், சாரதி ஆகியோர் திருப்பூர் மங்கலம் நால் ரோடு பகுதியில் லோகநாதன், உமா மகேஸ்வரன் ஆகியோரிடம் கஞ்சா கொடுத்துள்ளனர். ஆனால் அதன் மீது லோகநாதன், உமா மகேஸ்வரன் ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை சோதித்தபோது அது கஞ்சா அல்ல என்பதும், மாட்டு சாணம், வைக்கோல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்பட்ட பொருள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மங்கலம் நால் ரோட்டில் இருந்து கோழிப்பண்ணை பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து கவின், சாரதி ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அந்த வாலிபர்களையும், அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தையும் சோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா போன்ற தயாரிப்பிலான மாட்டு சாணம் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து லோகநாதன், உமா மகேஸ்வரன் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கவின், சாரதி ஆகியோரை பிடித்து அவர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கவின், சாரதி ஆகியோர் வீட்டில் 1 கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் ₹32 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது லோகநாதன், உமா மகேஸ்வரன் ஆகியோர் யார் என்று தெரியாததால் மாட்டுசாணம், வைக்கோல் ஆகியவற்றை வைத்து கஞ்சா போன்று தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின் (22), சாரதி (23), உமா மகேஸ்வரன் (27), லோகநாதன் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Loganathan, Uma ,Mettupalayam ,Coimbatore ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது